1939 Hotline

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

  1. Home
  2. /
  3. செய்தி
  4. /
  5. டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள தேசிய நீர்...

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

இலங்கையில் 11.39 மில்லியன் பேர் இணையத்தளத்தை பயன்படுத்துவதாகவும், அதில் 8.20 மில்லியன் பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதாகவும் குறித்த கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் இது பிரதான ஊடகங்களின் பயன்பாட்டைவிட அபரிவிதமான வளர்ச்சியாகும். இந்த காலவோட்டத்துக்கு ஏற்றவகையில், தற்போது சகல நிறுவனங்கள் சமூக ஊடகங்களை தங்களை தேவைக்கேற்றவாறு பயன்படுத்தி வருகின்றன.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் தனது உத்தியோகபூர்வ கணக்கின் மூலம் தனது சேவையை மேம்படுத்தி வருகின்றது. இதன் அடுத்தகட்டமாக நுகர்வோர் சேவையை மேம்படுத்தும் நோக்கில், வட்ஸ்அப் செயலி மூலம் தானியங்கி தகவல்களை வழங்கும் சேவையை ஆரம்பித்துள்ளது. 2022 சர்வதேச நீர் தினத்தில் ஜனாதிபதி மூலம் இச்சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வட்ஸ்அப் தானியங்கி அரட்டை

0112044800 என்ற தொலைபேசி இலக்கத்தை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதிவுசெய்த பின்னர், குறித்த இலக்கத்துக்கு “Hi” என்று அனுப்புவதன் மூலம் தானியங்கி முறையில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். இந்த வட்ஸ்அப் சேவையை தெற்காசியாவில் நுகர்வோருக்கு முதலாவது அறிமுகப்படுத்திய பயன்பாட்டு நிறுவனம் என்ற பெருமையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தனதாக்கிக்கொண்டுள்ளது.

இச்சேவைமூலம் நீர்க்கசிவு, சேவை முறைப்பாடுகள், நீர்மானி முறைப்பாடுகள், கட்டணப் பட்டியல் விசாரணை, புதிய இணைப்புகள், நீர்க்கட்டணம் செலுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் பவுசர் சேவைகள் போன்றவற்றை வீட்டிலிருந்துவாறே விரல்நுனியில் உடனுக்குடன் மேற்கொள்ள முடியும். சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்ற மும்மொழிகளிலும் இச்சேவையை பயன்படுத்த முடியும்.

சகலருக்கும் பரீட்சயமான வட்ஸ்அப் செயலி மூலம் 60% தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இதனை அடிப்படையாகக்கொண்டு வட்ஸ்அப் செயலி மூலம் நுகர்வோர் தங்களது சேவையை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அலுவலகங்களுக்கு சென்று நேரத்தை செலவிட வேண்டிய தேவை இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

0112044800 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு “Hi” என்று அனுப்பியவுடன், மொழியை தெரிவுசெய்யுமாறு கூறப்படும். நீங்கள் விரும்பிய மொழியை தெரிவுசெய்தால், அடுத்ததாக தற்போதைய பாவனையாரா என கேட்கப்படும். அதற்கு நீங்கள் ஆம் என்றால், சேவை தொடர்பான பட்டியல் வரும். உதாரணமாக உங்கள் வீட்டு நீர்மானியில் கசிவு இருந்தால், நீர்க்கசிவு என்பதை தெரிவுசெய்யவும். அடுத்தாக கசிவின் வகை, கணக்கிலக்கத்தை அனுப்பவும்.

அதற்கடுத்து, உங்கள் விபரங்களை உறுதிப்படுத்திய பின்னர் Google Map மூலம் உங்கள் முகவரியை தெரியப்படுத்தவும். அதன்பின் நீர்க்கசிவு புகைப்படத்தை அனுப்பினால் உங்களுக்கு முறைப்பாட்டு இலக்கமொன்று வழங்கப்படும். முறைப்பாட்டின் தற்போதைய நிலைமைய கண்டறிவதற்கான இணையத்தள இணைப்பும் கிடைக்கப்பெறும். அத்துடன் குறுந்தகவல் (SMS) மூலமும் உங்கள் தொலைபேசிக்கு விபரம் அனுப்பிவைக்கப்படும்.

அதன்பின், உங்கள் பிரதேசத்துக்குரிய அலுவலக பொறுப்பாளர் (OIC) அவலுவலகத்துக்கு குறித்த முறைப்பாடு உடனடியாக அனுப்பிவைக்கப்படும். அதன்பின் குறித்த அலுவலகத்தின் ஊழியர்கள் உங்கள் வீடுகளுக்கு வருகைதந்து நீர்க்கசிவை சரிசெய்து தருவார்கள். குறித்த வேலை செய்துமுடிக்கப்பட்ட பின், உங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும். இதன்மூலம் அலுவலகத்துக்கு செல்லாமல், வீட்டிலிருந்தவாறே உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு நேரத்தை சேமிக்கமுடியும்.

செயலிகள் (Apps)

நுகர்வோர் மற்றும் ஊழியர்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு செயலிகள் (Apps) தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் உருவாக்கப்பட்டுள்ளன. ஸ்மாட்போன்களில் கீழுள்ள செயலிகளை நிறுவி (Install) உங்கள் தேவைகளை இலகுவாக நிவர்த்திசெய்ய முடியும்.

1. NWSDB Self Care App

அன்ட்ரொய்ட் மற்றும் ஐபோன் கையடக்கத்தொலைபேசி பாவனையாளர்கள் இந்த செயலியை பயன்படுத்தி, உங்களது நிலுவைகளை பார்வையிடுவதுடன் கட்டணங்களையும் செலுத்தமுடியும். அத்துடன் கடந்த மாதாந்த கட்டணம், கொடுப்பனவுகள் என்பவற்றை பார்வையிடுவதுடன், அலகுகளுக்கான கட்டணங்கள் குறித்தும் கணிப்பீடு செய்யலாம். இதுதவிர, உங்களுடைய முறைப்பாடுகளை இதன்மூலம் மேற்கொள்ள முடியும்.

2. NWSDB Field Services App

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கள ஊழியர்கள் பயன்படுத்தும் வகையில் இந்த செயலியை அன்ட்ரொய்ட் கையடக்கத்தொலைபேசியில் கிடைக்கும். இந்த செயலியைப் பயன்படுத்தி கள ஊழியர்கள் தரவுகள் மூலம் மத்திய சேவை அமைப்பை அணுகமுடியும். அத்துடன் நுகர்வோரின் சுயவிபரங்கள், கட்டணங்கள், நிலுவைகள் போன்ற விபரங்களையும் அவதானிக்கலாம். புதிய இணைப்புகளுக்கான மதிப்பீடு, நீர்மானி மாற்றீடு போன்ற விடயங்களை கள ஊழியர்கள் நிர்வகிக்க முடியும். அத்துடன் நுகர்வோரின் இருப்பிடங்களையும் இலகுவாக அறிந்துகொள்ளலாம்.

3. NWSDB Navigator

அன்ட்ரொய்ட் கையடக்கத்தொலைபேசியின் Play Store இல் கிடைக்கும் இந்த செயலி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சமூகமளிக்கும் நேரங்கள், சம்பள விபரங்கள், கடன் விபரங்கள், விடுமுறை, பதவி உயர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகள் போன்ற பல விடயங்களை அறிந்துகொள்ள முடியும்.

4. NWSDB Meter Reading App (Private)

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வருமான உத்தியோகத்தர்களுக்கு (மானி வாசிப்பாளர்கள்) வழங்கப்பட்டுள்ள பிரத்தியேக கைடயக்கத் தொலைபேசியில் நிறுவப்பட்டுள்ள இச்செயலியைப் பயன்படுத்தி, மானிவாசிப்புகள் தரவுநிலையத்தில் உட்புகுத்தப்படுவதால் கணக்கெடுப்பு, கட்டணங்கள் போன்றவை இலகுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கணிப்பீட்டில் தவறுகள் ஏற்படமால், மானிவாசிப்புகளுக்கு ஏற்றவகையில் நீர்க்கட்டணம் அறவிடப்படும்.

இலத்திரனியல் நீர்க்கட்டணப் பட்டியல்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, காகிதாதிகள் தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற காரணங்களை கருத்திற்கொண்டு, இலங்கையின் பிரதான சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நீர்க்கட்டணப் பட்டியல் அச்சிடுவதை மட்டுப்படுத்தி, இலத்திரனியல் முறைமைக்கு (e-Bill) மாற்றியமைத்துள்ளது. அதாவது, மாதாந்த நீர்க்கட்டணப் பட்டியல் உங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்படும்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் (www.waterboard.lk) உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குச் சென்று eBill Registration என்பதை அழுத்துவதன் மூலம் அல்லது ebis.waterboard.lk/directPay/#/EbillRegister என்ற இணைய முகவரிக்குச் சென்று உங்களின் நீர் விநியோக கணக்கு இலக்கம், கையடக்கத் தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி என்பவற்றை பதிவுசெய்யவும். அதன்பின் உங்களுடைய மாதாந்த நீர்க்கட்டணப் பட்டியல் PDF வடிவில் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்படும்.

குறுந்தகவல் (SMS) மூலமும் நீர்க்கட்டணப் பட்டியல்களை கையடக்கத் தொலைபேசிகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும். நீர் விநியோக கணக்கு இலக்கம் (இடைவெளி விட்டு) மின்னஞ்சல் முகவரி என்பவற்றை 0719399999 இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பியவுடன், உங்கள் நீர்க்கட்டணப் பட்டியல் மின்னஞ்சல் மூலமும் குறுந்தகவல் மூலமும் அனுப்பிவைக்கப்படும். குறுந்தகவல் மூலம் மாத்திரம் பெறுவதற்கு உங்கள் கணக்கு இலக்கத்தை 0719399999 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.

இணையவழி கட்டணம் செலுத்தல்

எல்லோருடைய கைகளிலும் ஸ்மாட்போன் இருக்கும்போது, நாம் ஏன் கையில் பணத்தை எடுத்துக்கொண்டு, வரிசைகளில் காத்திருந்து நீர்க்கட்டணங்களை செலுத்த வேண்டும். உங்களுடைய Visa, Master வங்கி அட்டைகளின் மூலம் வீட்டிலிருந்தவாறே பணம் செலுத்தமுடியும். ஒன்லைன் மூலம் செலுத்தப்படும் கட்டணங்கள் உடனுக்குடன் உங்கள் கணக்கில் கழிக்கப்படும். பின்வரும் வழிமுறைகளில் உங்களுடைய நீர்க்கட்டணத்தை செலுத்தமுடியும்.

1. இணையத்தளம் (Smart Zone)

www.waterboard.lk என்ற இணையத்தளத்துக்குப் பிரவேசித்து Bill Pay Online என்பதை தெரிவுசெய்து அல்லது ebis.waterboard.lk/smartzone/English/OnlinePayments என்ற முகவரிக்குச் சென்று, கட்டணங்களை செலுத்தமுடியும். இதற்கு உங்கள் நீர் விநியோக கணக்கு இலக்கம், வங்கி அட்டை விபரங்களை கொடுக்கவேண்டும். பணம் செலுத்திய பின்னர் பற்றுச்சீட்டுகளை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள்.

2. NWSDB Selfcare App

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகபூர்வ செயலியான NWSDB Selfcare App மூலம் நீர்க் கட்டணங்களை நேரடியாக செலுத்தமுடியும். குறித்த செயலியில் உங்கள் நிலுவைகள் காண்பிக்கப்படும். அதில் Pay என்பதை அழுத்துவதன் மூலம் உங்கள் வங்கி அட்டையை பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தமுடியும்.

3. வட்ஸ்அப் செயலி

0112044800 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு “Hi” என்று அனுப்பி, அதில் கட்டணம் செலுத்துவதை தெரிவுசெய்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் இணைப்பை (Link) பயன்படுத்தி கட்டணங்களை இலகுவாக செலுத்த முடியும். இன்று சகலரும் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதால் இது இலகுவானதொரு வழியாக இருக்கும்.

4. மின்னஞ்சல் இலத்திரனியல் பட்டியல்

நீங்கள் இலத்திரனியல் நீர்க்கட்டணப் பட்டியலை (e-Bill) பதிவுசெய்திருந்தால், மாதாந்தம் உங்கள் மின்னஞ்சலுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ள Pay Now என்பதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கட்டணங்களை செலுத்த முடியும்.

5. குறுந்தகவல் (SMS) மூலம் செலுத்தல்

நீர்க்கட்டணம் ஒவ்வொரு மாதமும் உங்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந்தகவல் (SMS) மூலம் கிடைக்கப்பெற்றால், அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை (Link) கிளிக் செய்வதன் மூலம் நேரடியாக கட்டணம் செலுத்த முடியும்.

 

  • பிறவ்ஸ் முஹம்மட்
    Corporate Communication Unit, NWSDB